பல்வேறு வேறுபாடுகளைக் கொண்ட இந்திய மக்களிடையே நாட்டுப்பற்றையும் ஒற்றுமை உணர்வையும் வளர்த்தெடுப்பதில் தேசிய சின்னங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
தேசியகீதம்
ஜன கண மன, நமது தேசிய கீதமாகும்.
இது இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைபாட்டிற்கு அடையாளச் சின்னமாக விளங்குகிறது.
இப்பாடல் இரவீந்திரநாத் தாகூரால் வங்காள மொழியில் எழுதப்பட்டது.
இதன் இந்தி மொழியாக்கம் ஜனவரி 24, 1950இல் இந்திய அரசியலமைப்புச் சபையால் தேசிய கீதமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
1971, டிசம்பர் 27ஆம் நாள் கொல்கத்தாவில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டின் போது இப்பாடல் முதன் முதலாகப் பாடப்பட்டது.
பாடும்போது பின்பற்ற வேண்டியன
இக்கீதத்தை சுமார் 52 வினாடிகளில் பாட இசைக்க வேண்டும்.
பாடும்போது அனைவரும் எவ்வித அசைவுகளும் இன்றி நேராக நிற்கவேண்டும்
பொருள் புரிந்து சரியாகப் பாடவேண்டும்.
இந்திய தேசியப் பாடல் - வந்தே மாதரம்
வங்க எழுத்தாளர் பங்கிம் சந்திர சட்டர்ஜி எழுதிய "வந்தே மாதரம்" பாடலின் முதல் பத்தி விடுதலை போராட்டத்தில் முக்கியப் பங்களித்தது. இப்பாடல் ஆனந்த மடம் என்ற நாவலிலிருந்து எடுக்கப்பட்டது.
இதன் காரணமாக, "தேசிய கீதத்திற்க்கு இணையான தேசியப் பாடல் என்ற சிறப்பு இப்பாடலுக்கு அளிக்கப்படுகிறது" என அரசியலமைப்பு சட்ட நிர்ணய மன்றத் தலைவரும் மேனாள் குடியரசுத் தலைவருமான ராஜேந்திர பிரசாத் 1950, ஜனவரி 24 ஆம் நாள் அறிவித்தார்.
இந்திய தேசிய உறுதிமொழி
"இந்தியா எனது தாய்நாடு....." எனத் தொடங்கும் நமது தேசிய உறுதிமொழியைப் பிதிமாரி வெங்கட சுப்பாராவ் என்பவர் தெலுங்கில் எழுதினார்.
இந்திய நாணயம் (INR) ₹
இந்தியாவின் அதிகாரபூர்வ பணத்தின் பெயர் ரூபாய். 16-ம் நூற்றாண்டில் மன்னர் ஷெர்ஷா சூரி வெளியிட்ட வெள்ளி நாணயத்துக்கு 'ருபியா' என்று பெயர். அதுவே ரூபாய் என்று மருவியுள்ளது. ரூபாய்க்கான சின்னம் ₹. இந்தச் சின்னத்தை 2010-ல் வடிவமைத்தவர் தமிழகத்தைச் சேர்ந்த டி. உதயகுமார் ஆவார்.
இந்திய தேசிய நாட்காட்டி
பேரரசர் கனிஷ்கர் காலத்தில் கி.பி.(பொ.ஆ.) 78-ல் சக ஆண்டு முறை தொடங்கியது.
இளவேனில் கால சம பகல்- இரவு நாளான மார்ச் 22 அன்று இந்த ஆண்டு தொடங்குகிறது. லீப் ஆண்டுகளில் இது மார்ச் 21 ஆக அமையும். சக ஆண்டு முறையையே நமது தேசிய நாட்காட்டி பின்பற்றுகிறது.
பிரபல வான் இயற்பியலாளர் மேக்னாத் சாகா தலைமையிலான நாட்காட்டி சீரமைப்புக் குழுவின் பரிந்துரையின் பேரில் 1957 மார்ச் 22 முதல் தேசிய நாட்காட்டி ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இந்திய தேசிய நுண்ணுயிரி
நாம் அன்றாடம் சாப்பிடும் தயிர் பாலிலிருந்து உருவாகப் பயன்படுவது லாக்டோபேசில்லஸ் டெல்புரூக்கி எனும் நுண்ணுயிர்.
2012-ம் ஆண்டில் இது தேசிய நுண்ணுயிராக அங்கீகரிக்கப்பட்டது.
இந்தப் பாக்டீரியா வேதிவினை புரிந்து பாலில் இருக்கும் புரதத்தை மாற்றுவதால் தயிர் கிடைக்கிறது. தயிர் செரிமானத்துக்கும், வயிற்றுக் கோளாறுகளுக்கும், குளிர்ச்சி தருவதற்கும் அறியப்பட்டது.
இந்திய தேசிய விடுமுறை நாட்கள்
இந்திய சுதந்திர நாள்
ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 15-ம் தேதி இந்திய சுதந்திர நாள். ஆங்கிலேயர்களுக்கு எதிரான விடுதலைப் போராட்டத்தில் நாடு விடுதலை பெற்ற நாள் அது, உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு உதித்த நாளாகவும் கருதப்படுகிறது.
நாடு விடுதலை பெற்ற நாளன்று மகாகவி பாரதியாரின் 'ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமென்று ஆடுவோமே' என்ற பாடலை அகில இந்திய வானொலியில் பாடிய பெருமையைப் பெற்றவர் மறைந்த கர்நாடக இசைப் பாடகி டி.கே. பட்டம்மாள். சுதந்திர நாள் இன்றைக்கும் நாடெங்கும் கோலாகலமாக அனைத்துத் தரப்பினராலும் கொண்டாடப்பட்டுவருகிறது. அன்றைக்கு நாட்டின் பிரதமர் டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றுவது முக்கிய நிகழ்வு ஆகும்.
இந்திய குடியரசு நாள்
1950 ஜனவரி 26-ம் தேதி இந்தியா குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டது. அதைக் கொண்டாடும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் குடியரசு நாள் கொண்டாடப்படுகிறது.
இந்திய அரசியல் சாசனம் நடைமுறைக்கு வந்த நாளே, குடியரசு நாள்.
1947-லேயே நாடு விடுதலை பெற்றுவிட்டாலும், அதற்குப் பிறகும் பிரிட்டன் அரசியே இந்தியாவின் கௌரவத் தலைவராக இருந்து வந்தார்.
குடியரசு நாடாக அறிவிக்கப்பட்ட பிறகு, நாட்டின் முதல் குடிமகன் குடியரசுத் தலைவர் ஆவார். குடியரசு நாளில் அவரே செங்கோட்டையில் கொடியேற்றுவார்.
இந்தியக் குடியரசு நாளின் மூன்றாவது நாளான ஜனவரி 29, அன்று 'பாசறைக்கு திரும்புதல்' என்ற விழா சிறப்பாக நடைபெறும், அந்நாளில் தரைப்படை, கடற்படை, விமானப்படையைச் சேர்ந்த இசைக்குழுவினர் நிகழ்ச்சிகளை நடத்துவர். குடியரசு தலைவர் இந்நிகழ்வின் முதன்மை விருந்தினர் ஆவார். இவ்விழாவின் ஒரு பகுதியாக மாலை 6 மணிக்கு குடியரசுத் தலைவர் மாளிகை மின்விளக்குகளால் அலங்கரிக்கப்படும்.
காந்தி ஜெயந்தி
தேசத் தந்தை மகாத்மா காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் 2, தேசிய நாட்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுக் கொண்டாடப்படுகிறது.
காந்தியின் பிறந்த நாளைச், 'சர்வதேச அகிம்சை நாள்' ஆக 2007 ல் அங்கீகரித்து ஐ.நா. சபை கொண்டாடி வருகிறது.